SHARE THIS NEWS please, THANK YOU
............................

அரசியலில் இருந்து ஒதுங்க மாட்டேன்- விஜயசாந்தி

வைஜெயந்தி ஐ.பி.எஸ். என்ற போலீஸ் படத்தில் அதிரடியான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜயசாந்தி. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.

பின்னர் ஆந்திர அரசியலுக்குள் நுழைந்தார். அங்கும் கலக்கியவர் 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகேஷ் பாபு நடிக்கும் சரிலேரு நீக்கவேரு படம் மூலம் மீண்டும் நடிப்புக்கு வந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

MT4 Platforms

கேள்வி:- சினிமாவில் மீண்டும் நடிக்கும் அனுபவம்?

பதில்:- மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது பதட்டமாக இருந்தேன். இந்த 13 ஆண்டுகளில் சினிமா ரொம்பவே மாறிவிட்டது. எனக்கு நிறைய வி‌ஷயங்கள் புதிதாக இருந்தன. கிட்டத்தட்ட பள்ளிக்கு முதல் நாள் செல்லும் குழந்தை போலவே உணர்ந்தேன். 2006-ம் ஆண்டு நாயுடம்மா என்ற படத்தில் கடைசியாக நடித்தேன்.

அதன் பின்னர் அரசியல் பணி, மக்கள் பணியில் முழுதாக ஈடுபட சென்று விட்டேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. இந்த படத்தின் இயக்குனர் சில ஆண்டுகளுக்கு முன்பே வேறு ஒரு படத்துக்காக கேட்டார். நான் மறுத்துவிட்டேன். ஆனால் இந்த கதையை கேட்டதும் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டது.

தேர்தலுக்கு பின்னர் நேரமும் கிடைத்ததால் ஒப்புக்கொண்டேன். மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுடன் நடித்து இருக்கிறேன். அவர் மகனுடன் தற்போது நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ஒருமுறை அவருடன் நடித்துள்ளேன். அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.

கேள்வி:- உங்களுக்கு பின் லேடி சூப்பர் ஸ்டாராக எந்த நடிகையுமே வரவில்லையே?

பதில்:- அப்போது எனக்கு கிடைத்த நல்ல இயக்குனர்கள் தான் இதற்கு காரணம். ஆனால் இன்று அந்த அளவுக்கு நல்ல டைரக்டர்களும் இல்லை. கதாநாயகியை மையப்படுத்தும் படங்களும் வருவது இல்லை. கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தும் படங்கள் தான் அதிகமாக வருகின்றன.

கதாநாயகியை மையப்படுத்தும் படங்களும் பெரும்பாலும் பேய் படங்களாக தான் இருக்கின்றன. ‘ராஜ மவுலி’ போன்ற மிக சில இயக்குனர்களே பெண்களுக்கான கதா பாத்திரங்களை சிறப்பாகவும் தனித்துவமாகவும் உருவாக்குகிறார்கள். டைரக்டர்கள் தான் லேடி சூப்பர் ஸ்டாரை உருவாக்க முடியும். அதற்கு கதாநாயகியை மையப்படுத்தும் கதைகள் வர வேண்டும்.

கேள்வி:- இப்போது இருக்கும் நடிகைகளில் உங்களை கவர்ந்தவர் யார்?

பதில்:- இல்லை. அப்படி யாரையுமே யோசிக்க முடியவில்லை. இப்போது சினிமாவும் அதில் பணி புரிவதும் நிறைய மாறிவிட்டது. இப்போது இருப்பவர்கள் ஏனோ தானோ என்றுதான் பணி புரிகிறார்கள். வருகிறோம், நடிக்கிறோம், கிளம்புகிறோம் என்றுதான் இருக்கிறார்கள்.

நான் நடித்தபோது ஒரே ஆண்டில் 17, 18 படங்களில் நடித்தேன். தூக்கமே இல்லாமல் ஒரே நாளில் 6 ஷிப்ட்கள் வரை நடித்தேன். என்னால் முடிந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். இப்போது ஒரு ஆண்டுக்கு ஓரிரு படங்கள் தான் நடிக்கிறார்கள். ஆனாலும் கூட யாருமே கவனத்தை ஈர்ப்பது இல்லை.

கேள்வி:- மீடூ போன்ற இயக்கங்கள் மூலம் பெண்களின் குரல் உயர்ந்துள்ளதே?

பதில்:- இதற்கு சமூகவலைதளங்கள் ஏற்படுத்திய தாக்கமே முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் சமூகவலைதளங்களிலேயே பெண்களை அதிகம் காயப்படுத்துவது நடக்கிறது.

மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கப்படுகிறார்கள். சமூகவலைதளங்களை நாம் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். சினிமா, டிவிக்கு இருப்பது போல சமூகவலைதளங்களுக்கும் சென்சார் அவசியம்.

கேள்வி:- சினிமா துறையில் செக்ஸ் புகார்கள் அதிகரித்துள்ளதே?

பதில்:- இது எல்லா துறைகளிலுமே இருப்பதுதான். சினிமாவிலும் சில மோசமான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று கேட்கிறோம்.

ஆனால் யார் தண்டிப்பது? சட்டத்தை கையில் எடுக்க முடியுமா? பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களில் அரசு தான் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். அதுவரை பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் கமிட்டிகள் எல்லாமே பயன் இல்லாதவை தான்.

கேள்வி:- உங்களுக்கு அப்படி ஏதும் நடந்துள்ளதா?

பதில்:- இல்லை. அப்போது எல்லோருமே மிகவும் ஒழுக்கமானவராகவும் கட்டுப்பாடு உள்ளவர்களாகவும் இருந்தனர். சினிமாவில் கவனம் செலுத்தவே எங்களுக்கு நேரம் சரியாக இருந்தது.

சினிமாத்துறையே ஒரு குடும்பம் போல இருந்தது. சினிமா செட்டே ஒரு பள்ளி போலத் தான் இருக்கும். இப்போதுதான் இதுபோன்ற செய்திகளை கேள்விப்படுகிறோம். என் காலத்தில் இதுபோன்ற செய்தி கூட வந்தது இல்லை.

கேள்வி:-ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவதில்லையே?

பதில்:- இது இன்னமும் தொடர்கிறது. சினிமாவில் இருப்பவர்களின் மனநிலை மாறவேண்டும். அப்போதுதான் இந்த மாற்றம் வரும். ஹீரோக்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்கினால் அதை பற்றி யாரும் எழுதுவதோ பேசுவதோ இல்லை.

ஆனால் ஹீரோயின்கள் வி‌ஷயத்தில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள். நான் நடித்த சமயத்தில் என் சம்பளம் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வரும். அதை கண்டுகொண்டதே இல்லை. என் பணிக்காக நியாயமான ஊதியத்தை பெற்றேன்.

கேள்வி:- சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா?

விஜயசாந்தி

பதில்:- இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அடுத்து எதுவும் ஒப்பந்தமாகவில்லை. சினிமாவில் நடிப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அரசியலையும் மக்கள் பணியையும் கைவிட மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள் படிக்க :